Tuesday, June 22, 2021

நான் வாசித்த புத்தகங்கள் - பகுதி -1 (My favourite books -1)


                                                   உறைபனி உலகில்





 ஆசிரியர் : கரந்தை ஜெயக்குமார் 

நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.

நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது
ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.
வாருங்கள் இவரோடு சேர்ந்து நாமும் இவரது பயணத்தை, பயணித்துப் பார்ப்போம்.

இந்த புத்தகம் இவளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று நான் வருத்தப்பட்டேன். அவ்வளவு விறுவிறுப்பாக ஆசிரியர் நம்மை இந்த புத்தகத்தோடு ஒன்றி விட வைத்து விடுகிறார் . இந்த புத்தகத்தை மையமாக  வைத்து சினிமா எடுக்க முயற்சிக்கலாம். திரைக்கதைக்கு தேவையான நிறைய விஷயங்கள் இதில் அமைந்துள்ளன.

மதிப்பிற்குரிய கர்னல் .பா.கணேசன் அவர்களின் தலைமைக்கே உரிய தைரியமும் எல்லாரையும் ஒன்றிணைத்து வழி நடத்தி செல்லும் விதமும் சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்தியா அண்டார்டிகாவில் அமைத்துள்ள தக்ஷின் கங்கோத்ரி ஆய்வு கூடம் பற்றியும், யாருமே எளிதில்  வந்து உதவ இயலாத பனி தேசத்தில் தாய் நாட்டுக்காக உழைத்தவர்கள் பற்றியும் தெரிய வருகிறது. மதிற்பிற்குரிய கர்னல்.பா.கணேசன் அவர்கள்  ஒரு தமிழர் என்பதையும் நம் தாய் மண்ணை அவர் அண்டார்டிக்காவிலும் தூவி உள்ளார் என்று நினைக்கும் போது  உள்ளம் பூரித்து மகிழ்கின்றது

இது மட்டும்தானா என்றால் , இல்லை மனிதன் தான் இன்னமும் இயற்கையின் முன் ஒரு சிறு குழந்தை இந்த புத்தகம் படிக்கும் பொது தோன்றுகிறது.

புத்தகத்தின் ஒரு சில வரிகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

" ஆண்டு 1912. சனவரி 17. பிற்பகல் 3.00 மணி. உலகின் தென் துருவம். அண்டார்டிகா. எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி. மிகப் பெரும் பனிப் பாலைவனம்"

"ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 12,000 கிமீ தொலைவு, கடலில் பயணித்தாக வேண்டும். முழுவதுமே இடைநில்லா பயணம்தான். கோவாவில் இருந்து அண்டார்டிகா செல்லும் வழியில், இரண்டே இரண்டு தீவுகள் மட்டுமே உண்டு. ஒன்று மொரீசியஸ் மற்றொன்று மொரியன் தீவு. மற்றபடி கடல், கடல், கடல் மட்டும்தான்."

ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை இயற்கை எந்த அளவிற்கு சோதிக்க முடியுமோ , அப்படியெல்லாம் உடலாலும்  மனதாலும் வாடி வதைக்கின்ற ஒரு பயணமாகத்தான் இந்த பனி பாலைவனம்  பயணம் இருந்திருக்க வேண்டும். மேலும் கடலை பற்றி ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார் "இயற்கையின் எண்ணற்ற வினோதங்களில் கடலும் ஒன்று. நேரில் பார்ப்பதால் மட்டுமே கடலைப் புரிந்து கொள்ள முடியாது. நீரும் அலைகளும் மட்டுமே கடல் அல்ல என்பதை ஆய்வுக் குழுவினர் அனைவரும் உணர்ந்தனர்". கடல்தான் எத்தனை  விசித்திரமானது. நீங்களும் இந்த அனுபவத்தை பெற இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்.




Friday, June 11, 2021

பிரிவினிலே ஒரு நாள்..!!!

                                                            பிரிவினிலே ஒரு நாள்..!!!







தனியே 

தன்னந்தனியே 

தந்த வலியே

இன்ப துணையே

இன்று மறந்தாய் என்னையே ..!!!


இணையே 

எந்தன் இணையே 

உன்னை இழந்தாய் 

என்னை  மறந்தாய் 

துணை ஏதுமில்லையே..!!!


கடலாய் 

கங்கை நதியாய் 

கண்ணீர் வடித்தேன் 

கரைந்தோடி வா.!!!


உடலாய் 

மண் உடலாய் 

புதைமண் உடலாய்

மட்குமுன் தேடி வா.!!!


நெருப்பாய் 

தீப்பிழம்பாய் 

எரிமலையாய் 

மனம் வெடிக்கும் முன் 

நீ அணைக்க வா.!!!


காற்றாய் 

சூழல் காற்றாய் 

புயல் காற்றாய் 

மனம்  கடக்கும் முன் 

நீ நினைவில் வா.!!!


வெளியாய் 

வெட்ட வெளியாய் 

வான வெளியில் 

நான் மறையும் முன் 

உயிரே நீ எதிரில் வா.!!!


ப.மதிஅழகன் 





Thursday, June 10, 2021

குருதி ஆட்டம் அத்தியாயம் - 1

                                                            பகைவனின் கண் 


அமைதியான காலை வேளை, சூரியன் மெல்ல தன் கதிர்களை பரப்பிக்கொண்டிருந்தான். குருவிகள் குதூகலமாக கீச்சிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தன.விவசாயிகளோ காளைகளை உழவுக்கு கொண்டு சென்றார்கள்.பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்கள்.சூரிய கதிர்களின் வெளிச்சம் தாளாமல் கணேசன் மெல்ல எழுந்தான்.பாயைச் சுருட்டிக் கொண்டு மெல்ல வீட்டுக்குள் செல்லும் போது, இழுத்துப் போர்த்து தூங்கி கொண்டிருந்த மனைவி அலமேலுவைப் பார்த்து பொம்பளைங்க எல்லாம் வெளிய தண்ணி மோந்துகிட்ருக்காங்க, இன்னும் என்னடி தூக்கம் என்று கத்தினான். அதை சட்டை செய்யதவளாய் அவள் திரும்பி படுத்தாள். இந்தாடி  இப்போ எந்திரிக்கல அப்புறம் புரட்டி புடுவேன் என்று திட்டியவாறு கொல்லைப்புறம் சென்றான். குளித்து முடித்து வீட்டிற்குள் வரும்போது அவள் மனையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தாள். அலமேலு கஞ்சி எடுத்து வையி , சாமி கும்புட்டு வந்துடுறேன். கஞ்சி பாத்திரத்தை எடுத்து குடித்தான் , உப்பு கரித்தது . மீண்டும் மனைவி மீது எரிச்சல் கொண்டான். என்னடி கஞ்சி கரைச்சிருக்க ,மனுஷன் வாயில வைக்க முடியல, மூதேவி ஒரு நாளாவது ஒழுங்கா கடைக்கு அனுப்புறியா என்று திட்டி தீர்த்தான்.

இப்போ எதுக்கு கத்துறிங்க என்று பதிலுக்கு சீறினாள். கூறுகெட்ட சிறுக்கி என்னைய எதுத்து  பேசுறியா என்று ஓங்கி அறைந்தான். இந்தாரும் சும்மா மேல கை வைக்கிற வேலை வேணாம். எங்கண்ணங்க கிட்ட சொன்ன அம்புட்டுதான் என்று விசும்பினாள் .

சீமையில்லாத அண்ணங்க என்று ஆரம்பிக்க , இடைமறித்த அவள் , இந்தாங்க எங்க அம்மா வூட்ட பத்தி பேசுனா அம்புட்டுதான் , அப்புறம் நான் எங்க ஆத்தா வூட்டுக்கு போயிடுவேன் என்று அழுதாள்.


குருதி ஆட்டம் - முன்னுரை

                                           
                                                            குருதி ஆட்டம் 

 இயற்கையின் உன்னதமான படைப்பில் உலகம் எத்தனை அழகாக  உள்ளது. இதை முழுமையாக   காண ஒரு பிறவி போதாது , இருக்கும் ஒரு பிறவியிலும்  நிலை இல்லாத பிரச்சினைகளுக்காக  செய்யும் செயல்களின் பின் விளைவுகளை அறியாமலும் , தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தெரியாமலும் மனிதன் செய்யும் பாவங்கள் துரோகங்கள் தான் எத்தனை எத்தனை.

அன்பு   ஒன்றே  அனைத்து துரோகங்களுக்கும்  மருந்து ,  குருதி ஆட்டத்திலும் மனிதர்கள் மனிதம் மீது அன்பு கொள்ளாமல் , நஞ்சோடு அன்பு கொள்வதால் , தலைமுறை  தலைமுறையாக  மறந்துவிட துடிக்கும் வன்மத்தையும்,  அது  அவ்வப்போது ஆடுகின்ற ஆட்டத்தையும் "குருதி ஆட்டத்தையும்" காண்போம்.

நான் வாசித்த புத்தகங்கள்

                                                  நான் வாசித்த புத்தகங்கள் 



அன்பு நண்பர்களுக்கு ,


நான் வாசித்த சில நூல்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பொதுவாகவே இன்றைய கால மக்களுக்கு புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாகவே கருதுகிறேன் , 

புத்தகம் படிக்கும் ஆர்வம் இருப்பவர்களும் எந்த புத்தகத்தை படிப்பது , எந்த வகை நூல்களை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் இருப்பதையும் பார்க்க முடிகிறது . நீங்கள் புத்தகம் படிக்கும் ஆரம்பத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளில் படித்தால் உங்கள் ஆர்வம் அதிகரிக்கலாம் .

நிறைய புத்தகங்கள் படித்திருந்தாலும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு முறை நான் படித்த புத்தகங்களை  அசை போட வேண்டியுள்ளது. ஒரு நல்ல புத்தகம் நாம் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நம்மை  இன்னும் மேம்படுத்தும் என்பதும் என் எண்ணம் .


அடுத்த தொடரில் இன்னும் நிறைய பகிர்வோம்.


-ப.மதி அழகன் 

Wednesday, February 24, 2021

ஏலே செங்குருவி ...!!! - Yele Senguruvi !!!

                                     ஏலே செங்குருவி ...!!!




ஏலே செங்குருவி 

உன் சீலை வாசம் 

மோரத்தான் வந்துருக்கேன் ..!


ஆவி போகும்  பின்னே 

பாதை மறக்கும் முன்னே 

உன் காலடி தேடி வந்துருக்கேன் ..! (ஏலே)


நேத்து என் ரோஷம் 

காத்தா போனதடி 

மீண்டும் உன் வாசம் 

தேடி  எங்கும்  அலையுதடி ..!


செத்த நேரம் உன் மடியில தல சாஞ்சா 

மொத்த உசுரும் கூடுமடி..!   (ஏலே)


வீழாதே என் சிங்கமே

மாறாதே என் தங்கமே 

கம்ப கூழ் வச்சிருக்கேன் 

கருவாடு சுட்டுருக்கேன் 

ஒத்த வாயி துண்ணுப்புட்டா 

போகும் உசுரு நின்னுடுமே ..!


அக்கரையில் வீச்சருவா 

இக்கரையில் வெட்டருவா 

உன் கையோ மல்லிகைப்பூ 

என் கையோ காகிதப்பூ 

சாதி தீயில் வேகுதிப்போ..! (ஏலே)


   - ப.மதிஅழகன்








Monday, June 22, 2020

குருதி ஆட்டம் - Blood game ..!!!

குருதி ஆட்டம்..!!!



பகையின்னு வெட்டிப்போட்டா
துணையொண்ணு வேணும்முன்னு
அருவாளா தூக்கிகிட்டு வந்தாங்க..!!!

மண்ணெல்லாம் ரத்தவாசம்
கதை சொல்ல நாவே கூசும்
விளையாட்டை விதியாக்கி விட்டாங்க..!!!

அறுத்தவனும் அறுந்து போனான்
விதைச்சவனும் நொந்து போனான்
மண்ணுக்குள்ள சண்டையிட்டு நின்னாங்க..!!!

இனியாரு காக்க போறா
வேதனையை தீர்க்க போறா
ஊருக்குள்ள சாமியும் இல்லைங்க..!!!

சொந்தமெல்லாம் கொத்தா போச்சு
ஆடு மாடு செத்தே போச்சு
யாரிருக்கா இன்னுமிங்கே வந்திங்க..!!!

வெட்டருவா வீச்சருவா
வேல்கம்பு கோடாரி - கோடி
நான் செஞ்சு தாரேன் போன
உசுரு ஒண்ணெ ஒண்ணு கொண்டாங்க ..!!!



அடுத்து எழுத போகும் ஒரு நாவலின் சுருக்கமாக இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது.

-ப.மதிஅழகன்